அமெரிக்காவில் உருவாகிய “அன்னையர் தினம்”

0
132

தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை என்பார்கள். கருவறையிலிருந்து நம்மைத் தாங்கும் ஒரே ஜீவன் அன்னை மட்டுமே. அவர்களுடைய தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை. அந்த நடமாடும் தெய்வங்களைப் போற்றும் விதமாக இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையர் தினம் உருவாக்கம்:
பண்டைய கிரீசில், ‘ரியா’ என்ற கடவுளைத் தாயாக வழிபட்டனர். ரோமிலும், ‘சிபெல்லா’ என்ற பெண் கடவுளை, அன்னையாக தொழுதனர். அதன்பின் இந்த அன்னையர் தினம் என்பது அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிறு அன்னையர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதை இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட70 நாடுகள் பின்பற்றுகின்றன.

தாய் என்ற வரம் :
வீட்டில் உள்ள அனைவருக்கும் என்னப் பிடிக்கும் என்று அறிந்த அம்மாவிற்கு தனக்குப் பிடித்ததை ஒரு நாளும் செய்துக் கொண்டதில்லை. பிள்ளைகளுக்காகவே வாழ அவளால் மட்டுமே முடியும். நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால் நமக்காக முதலில் துடிப்பது நம் தாய் தான். எல்லாக் கடவுளையும் நாம் நம் தாயின் வடிவி்ல் தான் பார்க்கிறோம்.

ஏதாவது ஒரு வேலைப் பார்த்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து விடுவாள். சோர்ந்துக் கிடக்கும் நேரத்தில் நமக்குப் புத்துயிர் தருபவள் தாய். மனம் தளர்ந்து நிற்கும் நேரத்தில் உன்னால் முடியும் என்று கூறி நம் தன்னம்பிக்கையை வளர்த்துவிடுவாள் தாய். தன் குழந்தைக்கு எவ்வித அவப்பெயரும் வராமல் பார்த்துக்கொள்வாள். தனக்கு உணவில்லையேனும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் பிள்ளைகள் உண்பதைக் கண்டு மகிழ்வாள்.

அவள் அகராதியில் விடுமுறை என்ற வார்த்தையே கிடையாது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் வீட்டில் பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருப்பாள் தாய். தன் பிள்ளைகளை ஊர் போற்றும் உத்தமர்களாக வளர்க்க வேண்டும் என்றே விரும்புவாள்.

கண்டிப்புக் காட்டும் அம்மாக்களுக்கு உங்கள் மீது பாசம் இல்லை என்று அர்த்தமில்லை. பன்மடங்கு பாசம் இருக்கிறது ஆனால் அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. எங்கும் தன் பிள்ளைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ஓய்வறியா உழைப்பாளி அவள். தாய் என்றும் தன் பிள்ளைகள் தன் கூடவே இருக்க வேண்டும் என விரும்பவாள். அவளுடையத் தியாகங்களுக்கு ஈடு இணையே கிடையாது. தன் உயிரையும் துச்சமென எண்ணி தன் குழந்தையைப் பெற்றெடுப்பாள். தன் உதிரத்தைப் பாலாக்கிக் குழந்தையின் பசியாற்றுவாள். நமக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த அனைத்து தாய்மார்களுக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

-எழுத்தாளர் உமா

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here