அமெரிக்காவில் முதல் முறையாக கொரோனா பாதித்த செல்ல நாய் பலி..!!

0
138

முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது தெரியவில்லை. அதற்கு உறுதியான ஆதாரங்களும் இல்லை. ஆனால் சில சூழ்நிலைகளில், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகளுக்கு கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.

ஹாங்காங்கில் 2 நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பான தகவல்கள் கடந்த மே மாதம் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது இப்போது அமெரிக்காவுக்கும் பொருந்துகிறது. அங்கு முதல்முறையாக செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த ஜெர்மன் ஷெப்பேர்டு நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதை அமெரிக்காவின் விவசாயத்துறை மற்றும் தேசிய கால்நடை சேவைகள் ஆய்வகங்கள் கடந்த ஜூன் மாதம் அறிவித்தன. இந்த நாய்தான், அமெரிக்காவில் முதன்முதலாக கொரோனா பாதிப்புக்கு ஆளான செல்லப்பிராணி என கூறப்பட்டது.

முன்னதாக அந்த நாயின் எஜமானர்களில் ஒருவரான ராபர்ட் மஹோனிக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன.

அவர்களிடம் இருந்து இந்த நாய்க்கு கொரோனா பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதையொட்டி நாய் எஜமானர்கள், நேஷனல் ஜியாக்ரபிக் டி.வி. சேனலிடம் கூறும் போது, “ எங்கள் நாய்க்கு ஏப்ரல் மத்தியில் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. (இதற்கு முன்பாகவே ராபர்ட் மஹோனியாக்கு பல வாரங்களாக தொற்று இருந்து வந்திருக்கிறது.) தொடர்ந்து மூச்சு திணறல், சளியால் நாயின் உடல் நிலை சீராக பாதித்து வந்தது” என குறிப்பிட்டனர்.

கடந்த 11-ந் தேதி ரத்த வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து அந்த நாயை கருணைக்கொலை செய்து சாகடித்தனர்.

அந்த நாயின் மரணத்தில் கொரோனா வைரஸ் தொற்று முக்கிய பங்கை கொண்டிருந்ததா என்பது தெரியவில்லை என்ற போதிலும் ரத்த பரிசோதனைகள் அதற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருந்ததை காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே கொரோனா தொற்றின் மையமாக அமெரிக்கா மாறிவருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட வண்ணமாக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் குறைவில்லை. இது அமெரிக்க மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here