அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தையே இல்லை: ஈரான் தலைவர் உறுதி

0
45

ஏவுகணைகள் சோதனை, அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் மூத்த மதத் தலைவரான அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “அமெரிக்காவின் கொடுமையான பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது, ஏவுகணை மற்றும் அணுசக்தி சோதனைகளை நிறுத்துவது அமெரிக்காவின் நோக்கம்.

தேசிய திறன்களை நம்புவதும், எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் நம் மீதான அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்க்க உதவும்” என்று அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

மேலும், ஏவுகணைகள் சோதனை, அணு ஆயுதச் சோதனை தொடர்பாக இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக உள்ள ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அணு ஆயுதச் சோதனை தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இப்படித் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. பொதுமக்கள் பலர் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here