அமெரிக்க ஜார்ஜ் பிளாய்டும் இந்தியாவும் சமூக கண்ணோட்டம்

0
91

உலகம் முழுவதும் கொரோனா எப்படி பரவி இன்று வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறதோ அது போல, சமீபத்தில் ஓர் பரவல் ;ஓர் எழுச்சி; அது வெடித்தது மிகப் பெரிய புரட்சியாக காரணம் இனவெறி தாக்குதல். ஒரு நாட்டில் நடந்தது உலகமெல்லாம் காட்டுத்தீயை போல பரவி மக்களிடம் கோபத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியது. எந்த ஒரு சமூக ஊடகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு பெயர் ஒரு வாசகம் தான் அது “ஜார்ஜ் பிளாய்டு” என்ற பெயருடன் கூடிய வாசகம் “கருப்பர்கள் வாழ்வது முக்கியம்” என்பதுதான் அதுமட்டுமில்லாமல் அவர் கூறிய கடைசி வார்த்தை “என்னால் மூச்சு விடமுடியவில்லை” என்பதுதான் மிகப்பெரிய புரட்சிக்கும் மக்களின் கோபத்துக்கும் காரணம். அடக்குமுறைக்கு உள்ளாகிற ஒவ்வொரு மனிதனும் கடைசியில் சொல்லாமல் உணர்த்திவிட்டு போவது இந்த வார்த்தையைத் தான்.

ஜார்ஜ் பிளாய்டு என்ற எளிய மனிதர் கடைக்காரரிடம் சிகரெட் வாங்க கொடுத்த இருபது டாலரில் எழுந்த பிரச்சனைதான் இது அந்த பிரச்சினை ஓர் உயிரையே பறித்து இனவெறியின் உணர்வை பதித்திருக்கிறது. மினியாப்பொலிஸ் நகர காவல்துறை அதிகாரி டெரிக்சாவின் மட்டும் கூட இருந்த அதிகாரிகள் தான் இதற்கு காரணம் தொடர்ந்து 46 விநாடிகள் குரல்வளையை அழுத்தி கொன்றான் டெரிக்சாவின். என்னால் மூச்சு விடமுடியவில்லை என்று பலமுறை கதறியும் டெரிக்சாவின் அதை பொருட்படுத்தவில்லை.
இச்சம்பவத்திற்கு பிறகு ஒரு எழுத்தாளர் அமெரிக்க காவல் துறையைப் பற்றியும் 911 என்ற அவசர உதவி எண் பற்றியும் எழுதியிருந்தார். ஒரு பத்திரிக்கையில் அதாவது, இந்தியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் இதேபோன்று தாக்கப்பட்டார். அதற்கு காரணம் இந்த 911எண் தான். அந்த முதியவர் அமெரிக்காவில் இருக்கும் சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது ஒருநாள் நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும்போது இதேபோல திடீரென்று ஒரு காவல்துறை அதிகாரி வந்து அவரை கீழே தள்ளி அவர் இரண்டு கைகளையும் இருக்கப் பிடித்து அவர் முதுகின் மேல் ஏறி அமர்ந்து இருக்கிறார் காரணம் அந்த இந்திய முதியவர் நடந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த ஒருவர் காவல்துறைக்கு 911 என்ற எண் மூலம் தொடர்புகொண்டு என் வீட்டிற்கு வெளியே அச்சம் மிக்க ஒரு நபர் நடந்து கொண்டிருக்கிறார் நான் எப்படி என் வீட்டில் தனியாக குழந்தைகள் என் மனைவியை விட்டு வெளியே செல்வது என சொல்லியிருக்கிறார். உடனே காவல்துறை அங்கு விரைந்து வந்து அந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அதாவது கருப்பர் இனத்தவரோ ஏழை வெள்ளையரோ தங்கள் கண்களுக்கு அபாயமாய் தென்படுகிற யாராவது ஒருவரை பார்த்தால் உடனே அமெரிக்க வெள்ளையர்கள் 911என்ற எண்ணை தொடர்பு கொள்வார்கள் உடனே விரைந்து வரும் காவல்துறை இந்த நபரின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடத்துவார்கள் இந்த தாக்குதலுக்கு எந்த குற்றமும் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை இதுபோன்ற இனவெறி பிடித்த கொடுமையான செயல் அமெரிக்காவில் மட்டும் நடக்கவில்லை இந்தியாவிலும் பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது பெயர் மட்டும் தான் வித்தியாசம் இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில் மிகவும் கொடூரமாக கொல்லப்படுகிற அப்பாவிகள் அநேகம் இந்தக் கோவிட் காலத்திலும் சாதிவெறி இந்தியாவில் ஓயவில்லை. இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், இணையதள வாசிகள் இந்த இனவெறி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கருப்பர்கள் வாழ்வது முக்கியம் என்ற வாசகமும் ஜார்ஜ் பிளாய்டின் கடைசி வார்த்தையும் இங்கே எல்லா தரப்பினரையும் எதிர்ப்பு தெரிவிக்க வைத்தது பல இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர், ஏன் அரசியல்வாதிகள் கூட வீட்டிற்கு முன் நின்று எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.

இப்பொழுது இங்கே ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது அதாவது சாதி வெறியும் மத வெறியும் அதிகமாய் உள்ள இந்திய நாட்டில் இதுவரை சாதி வெறிக்கும் ஆணவப்படுகொலை மற்றும் மத ரீதியான நடந்த எந்த ஒரு சம்பவங்களுக்கும் கூட எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் கூட கருப்பர்கள் வாழ்வது முக்கியம் என அதிகம் பகிர்ந்துள்ளனர். தன் சொந்த நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு கூட குரல் கொடுக்காதவர்களும் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் கூட அமெரிக்க நாட்டில் நடந்த சம்பவத்திற்கு ஏன் இவ்வளவு கோபத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

எளிதாக சொன்னால் “பார்வை” அதாவது மனிதனோட பார்வையை பொருத்தே இங்கே எது நல்லது எது கெட்டது யார் வாழ வேண்டும் யார் ஆள வேண்டும் என வர்க்க பார்வையோடு தீர்மானிக்கிறார்கள். முதலாளித்துவ பார்வை உள்ளவர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கொண்டு வருகிறார்கள், இனவெறி பார்வை உள்ளவர்கள் இனப்படுகொலை செய்து வருகிறார்கள், மதவெறி பார்வை உள்ளவர்கள் சிறுபான்மையினரை கொடுமை செயல்களுக்கு உட்படுத்தி வருகிறார்கள், சாதி ரீதியான பார்வை உள்ளவர்கள் ஆணவகொலைகளையும் மற்றும் அவர்களை இழிவுபடுத்தியும் வருகிறார்கள். இது எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது இங்கே கொஞ்சம் மிச்சம் இருக்கிற மனிதத்துவம் தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது.
நாம் வாழும் உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நொடியிலும் இங்கே ஏதோ ஒரு வர்க்க பார்வைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகி ஒவ்வொரு நிமிடமும் மூச்சு விட முடியாமல் ஜார்ஜ் பிளாய்டு போல என்னால் இங்கு மூச்சுவிட முடியவில்லை என்னை வாழ விடுங்கள் என்று கதறி கொண்டேதான் இருக்கிறார். இங்கே மாற வேண்டியது ஆட்சியாளர்களோ அரசாங்கமோ இல்லை மாற வேண்டியது மனிதர்களோட பார்வை. ஒருவன் தன் பிறப்பினாலும் பிறந்த இடத்தினாலும் தான் ஒடுக்கபடுகிறான். மனிதனை இயங்க வைப்பது அவனுக்கு இருக்கும் உரிமை தான் அது மறுக்கப்படும் போதுதான் அவன் ஒடுக்கபடுகிறான். ஆனால் இங்கு அதிகாரவர்க்கமும் ஆதிக்க வர்க்கமும் சமுதாயத்தில் தலை உயர்ந்து நிற்கும் வரை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுடைய உரிமையின் விலை மலிவான தாகவே இருக்கும். ஒரு உயிர் மனிதனாக பிறக்கும் போது நீ ஆணாக பிறந்திருக்கிறாய் அல்லது பெண்ணாக பிறந்திருக்கிறாய், நீ இந்த சாதியை சார்ந்தவர், நீ இந்த மதத்தை சார்ந்தவர், நீ இந்த இனத்தை சார்ந்தவர் நீ வசதி உள்ள வீட்டீல் பிறந்தவர் என்ற அந்தந்த உணர்வையும் எண்ணங்களையும் புகுத்தாமல், நீ மனிதனாய் பிறந்திருக்கிறாய் மனிதத்தன்மையோடு வாழவேண்டும் என்ற மனிதத்துவத்தை கற்பித்தல் வேண்டும்.
சாதி மத இன வர்க்க பார்வைகளை வேறோடு அழிப்போம்.
இனிவரும் தலைமுறையினரிடம் மனிதத்துவ எண்ணங்களை புகுத்துவோம்.
அப்பொழுது எங்கும் மனிதத்துவத்தின் கொடி பறக்கும் மனிதம் வெல்லும்.

“நம் கற்றலும் நம்முடைய கற்பித்தலும் தான் மாற்றத்தை உண்டாக்கும், அதுவே நாளைய சமுதாயமாக உருவாகும். ”
– சாலமன் ராஜா
சமூக ஆர்வலர்
SALAMONRAJA2138@GMAIL.COM

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here