ஆடி 18ஆம் பெருக்கு..!!

0
171

ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி 18 இல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினார். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள்.

ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்த நிகழ்வே, ‘ஆடிப்பெருக்கு’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

இந்த விழாவை 18ம் தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன. 18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும். இந்நாளில் தீர்த்தமாடுவதன் மூலம், ஆன்மிக இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம். இந்த எண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது. அதனால், இந்நாள் நகை முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது. மாங்கல்யக் கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும். புதிய படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள்.

சமயபுரத்திலுள்ள ஆதிமாரியம்மன் கோவிலில், சகோதரர்களின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அர்ச்சனை செய்வதும் உண்டு. அன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்கப் பல்லக்கில் காவிரிக்கரையிலுள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சுவாமி சூடிக்களைந்த மாலை, கஸ்தூரி திருமண்காப்பு, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தாலிப்பொட்டு, வடை, அப்பம், தோசை ஆகியவற்றை யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து நதியில் விடுகின்றனர்.

ஆடிப்பெருக்கன்று காவிரியில் மூழ்கும் போது, ‘ஸ்ரீரங்கா கோவிந்தா கோபாலா…’ என பெருமாளின் நாமத்தையும், ‘தாயுமானவா தந்தையுமானவா சிவாயநம!’ என்று மலைக்கோட்டை சிவன் நாமத்தையும் உச்சரிப்பதன் மூலம், நம் உடலுடன் உள்ளமும் தூய்மையடையும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here