கீழடியில் வணிக நாகரீக அடையாளமாய் எடைக்கற்கள் கண்டெடுப்பு!

0
111

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் அகழாய்வில், எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடக்கிறது. கீழடியில் 2ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் தொடங்கின. ஆனால், மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப் பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, பணிகள் முழுவீச்சில் தொடங்கின.
இதன் தொடர்ச்சி நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அகழாய்வுக் குழி மற்றும் அதைச் சுற்றியுள்ள அகழாய்வுக் குழிகளில், இரும்பு உருக்கும் உலை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழிகளை, மேலும் அகழாய்வு செய்தபோது, அங்கு, எடைக்கற்கள் வெளிப்பட்டன. உருளை வடிவில் உள்ள இந்த கருங்கல், எடைக்கற்களின் கீழ் பாகங்கள் தட்டையாக உள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கள், முறையே, 8, 18, 150 மற்றும், 300 கிராம் எடை கொண்டவையாக உள்ளன.

கீழடியில், ஏற்கனவே கிடைத்த இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருளில் இருந்து உருக்கிய பின் வெளியேறும் கசடுகள் ஆகியவை, அங்கு தொழில் கூடங்கள் செயல்பட்டதற்கான ஆதாரமாக கருதப்பட்டது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள், இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றதற்கு சான்றாக உள்ளன என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here