கொரோனாவால் டுவிட்டரில் டிரெண்டிங்கான டிரம்ப் தம்பதி

0
24

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குணமாக வேண்டி அவரது ஆதரவாளர்களும், உலகின் பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் அவர் டிரெண்ட் ஆனார்.
உலக நாடுகளை அசைத்து பார்த்து விட்டது கொரோனா. அமெரிக்காவில் அதிமானபேர் பலியாகினர். நோய்தொற்று குறைந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் நவ.,03ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இருவரும் ஒரே மேடையில் விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இருவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைகளை உடனடியாக தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் முதன்மை மருத்துவர்கள், டிரம்ப் மற்றும் அவரது மனைவியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே டிரம்ப், மெலனியாவிற்கு கொரோனா தொற்று உறுதியான செய்தி உலக நாடுகள் முழுக்க சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் இவர்கள் டுவிட்டரில் டிரெண்டிங்கிற்கு வந்தனர். #DonaldTrump, #TrumpHasCovid, #Melania, #Mr.President, #trumptestspositive போன்ற ஹேஷ்டாக்குகள் லட்சக்கணக்கான பேரால் ரீ-டுவீட் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர் குணமாக வேண்டி அவரின் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் டிரம்ப் குணமாக வாழ்த்தி உள்ளனர். அதே சமயம் அவரின் எதிர்ப்பாளர்கள் இதை வைத்து மீம்ஸ் வெளியிட்டு டிரோல் செய்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here