டிரம்ப் – ஜோ பிடன் இடையிலான 2வது விவாதம் ரத்து

0
14

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசார விவாத நிகழ்ச்சி விர்ச்சுவல் முறையில் மாற்றப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்ததால், 2வது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். அதிபர் வேட்பாளர்கள் 3 முறையும், துணை அதிபர் வேட்பாளர்கள் ஒரு முறையும் விவாதம் நடத்துவர்.

அந்தவகையில் ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெற்ற முதல் விவாதத்தில் டிரம்ப், ஜோ பிடன் ஆகியோர் மாறி மாறி குற்றம் சாட்டினர். காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதம் முடிந்த சில நாட்களில் டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், 4வது நாளிலேயே வெள்ளை மாளிகை திரும்பினார். கொரோனா குணமாகாமல் விரைவாக டிஸ்சார்ஜ் ஆனது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர். இதனால் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள 2வது விவாதம் நடைபெறுமா என சந்தேகம் நீடித்தது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் கொரோனாவில் இருந்து மீளாத பட்சத்தில் விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என ஜோ பிடன் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து, 2வது விவாதத்தை விர்ச்சுவல் (காணொலி) முறையில் விவாத ஆணையம் மாற்றியது. இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், ‛இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விர்ச்சுவல் விவாதத்தில் நான் பங்கேற்க மாட்டேன். பிடனை காப்பாற்றுவதற்காகவே விவாத ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது,’ என குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, வரும் 15ம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விவாத ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 22ம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here