தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘PAUL HARRIS FELLOW’ அங்கீகாரம்!

0
39

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று ‘PAUL HARRIS FELLOW’ என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவித்துள்ளது. குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் `The Rotary Foundation of Rotary International’ எனும் அமைப்பு “Paul Harris Fellow” என்ற அங்கீகாரத்தை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. 1937 -38 -ம் ஆண்டில், முதல் முறையாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.


ரோட்டரி குழுமத்துக்கு 1000 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் கௌரவம் இது. ஆண்டு நிதியாக நீங்கள் ஆயிரம் அமெரிக்க டாலர்களை ரோட்டரி நிர்வாகத்துக்கு சேவையாக அளிக்கும்பட்சத்தில், உங்கள் சேவை மனப்பான்மையைப் பாராட்டி, உங்களுக்கு இந்த விருதை ரோட்டரி சங்கம் வழங்கும். இப்படி இந்த அங்கீகாரத்தை ஒருவர் பெறவும் செய்யலாம், ஒருவர் மற்றொருவருக்காக வழங்கவும் செய்யலாம்.

இது தவிர, ரோட்டரி சங்கம் நினைத்தாலும், யாருக்கும் வேண்டுமானாலும் இந்த விருதை வழங்கலாம். அதாவது, நாமும் நன்கொடை அளித்தும் பெறலாம். ரோட்டரியே நமக்கும் தரலாம். ரோட்டரி இன்டர்நேஷனலின் நிறுவனர் பால் ஹாரிஸ் எடுத்துக்காட்டுகின்ற சிறந்த தொழிற்பண்பும் தனிப்பட்ட மதிப்பீடுகளும் உடைய நபர்களுக்கு ரோட்டரி கிளப்புகள் இந்த கௌரவத்தை வழங்கலாம். இது எந்தவொரு நிதி பங்களிப்பும் இல்லாமல் வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையிலும் நன்கொடை அளிக்காத சிலருக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, ‘பவுல் ஹாரிஸ் ஃபெல்லோ’ (Paul Harris Fellow) என்னும் கவுரவ விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து இந்த விருதுக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உலக அளவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர், இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்கள். 2006 -ம் ஆண்டிலே 10 லட்சம் என்னும் எண்ணிக்கையை கடந்திருக்கிறது இந்த PAUL HARRIS FELLOW அங்கீகாரம். 2005ம் ஆண்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் ̀ PAUL HARRIS FELLOW அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது `குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

-திருமதி.இரா.ஜான்சிராணி கண்ணன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here