தமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது என்ன?

0
67

நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் 50% சம்பளத்தை குறைக்க தமிழ்த்திரையுலக தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் ரஜினி போன்ற  முன்னணி நடிகர்கள் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் தமிழ் சினிமா முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட திரையரங்குகள் நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கின்றன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதும் இனி எப்பொழுது திரையரங்குகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை.

மேலும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் திரையரங்கிற்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகம் நீடிக்கிறது. இதுமட்டுமல்லாமல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அரசு கட்டுப்பாடுகளுக்கு இணங்கி ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்களும் முன்பு போல ஒரு திரைப்படத்திலிருந்து லாபம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்களை கருத்தில் கொண்டு மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கும் பட்சத்தில் தயாரிப்பாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடிகர்களும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனை ஏற்று நடிகர் விஜய் ஆண்டனி ஹரிஷ் கல்யாண் இயக்குனர் ஹரி உள்ளிட்ட ஒரு சில பேர் மட்டும் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்த போதும் அதிகம் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களும், சங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களும் மௌனம் காத்தனர்.

இதற்கிடையில் மலையாள நடிகர்கள் தங்கள் ஊதியத்தில் 50 சதவீதத்தை விட்டுத்தருவதாக மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அறிவிக்க, அது தமிழ் சினிமாவிலும் எதிரொலித்தது. தமிழ் சினிமா நடிகர்களும், அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கலைஞர்களும் தங்கள் சம்பளத்தில் 50 சதவீதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என கூடிப்பேசி உள்ள தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, கேயார், விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி உள்ளிட்டோர், 50 சதவீத ஊதிய பிடித்ததை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நடிகர்கள், இயக்குனர்களிடம் ஒப்புதல் பெற்று விரைவில் இதை அறிக்கையாக வெளியிட உள்ளனர்.

ஆனால் முன்னணி நடிகர்கள் விஜய் , ரஜினி போன்றோர் ஆதரிப்பார்களா என்ற பேச்சும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் விவாதமாகிவருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here