துணிச்சல் , வீரம் , கருணை : காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

0
65

ஒருவர் இறந்த பின்பு அவரை நல்லடக்கம் செய்வதில் இந்த கொரோனா சூழலில் சாத்தியம் அற்றதாகவே உள்ளது. இந்த நிலையில் 55வயதான பெண்மணி இறந்து, இரண்டு நாட்களுக்கு மேல் அவரது உடலை அடக்கம் செய்ய இயலாமல், தவித்த நிலையை அறிந்த சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, அந்த பெண்ணின் உடலை மீட்டு, இறுதி சடங்கு செய்துள்ளார். இந்த செயல் காக்கிச்சட்டைக்குள் ஈரத்துளியாய் மக்களையும் ‘சல்யூட்’ அடிக்கவே செய்துள்ளது என்று சொல்லலாம்.

ஆய்வாளர் ராஜேஸ்வரி :
தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. . எம்.ஏ வரலாறு படித்தப்பின், 1999ம் ஆண்டு நடந்த காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி எஸ்.ஐயாக பணிக்குச்சேர்ந்தவர். தற்போது 21வருடங்களைத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

துணிச்சலும் வீரமும் :
2018 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.  தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஐ.சி.எப். ரயில்வே குடியிருப்பு அருகே காரில் ரோந்துப் பணிக்கு சென்றார். அப்போது, அங்கு ஒரு இளைஞர் பதுங்கி இருந்தார்.
போலீஸாரை பார்த்தும் அந்த இளைஞர் தப்பியோடினார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இளைஞரை விரட்டிப் பிடிக்க முயன்றபோது அந்த இளைஞர் கத்தியால் குத்த முயன்றார்.
சாதுர்யமாக அவரது தாக்குதலை தடுத்த காவல் ஆய்வாளர், தனது கார் ஓட்டுநரான காவலர் பிரபு உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.
விசாரணையில், அந்த இளைஞர், தனது சகோதரர் சுப்பிரமணிய ராஜூவை கொலை செய்ய முயன்ற அருண் என்பவரை கொல்வதற்காக அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் சஞ்சீவ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் இளைஞரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியையும், காவலர் பிரபுவையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சினிமா பாணியில் உதவி:
காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சென்ற ஆண்டு 2019 ஜூலை மாதம் சென்னையில் நள்ளிரவில் இரண்டு மணிக்குப் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை தன்னுடைய காவல்துறை ரோந்து வாகனத்தில் ஏற்றிச்சென்று தாயையும் சேயையும் தக்க சமயத்தில் காப்பாற்றி காக்கிச்சட்டையின் கம்பீரத்தோடு தன் அடுத்த கடமையை நோக்கிச் சென்றவருக்கு அடுத்த அரை மணிநேரத்தில் அவர் காப்பாற்றிய ஷீலா என்ற நிறைமாத கர்பிணிப் பெண் சுகப்பிரசவத்தில் பெண்குழந்தை பிறந்த செய்தி கிடைத்தது. பலரும் பாராட்டி வாழ்த்திவந்த அந்த சமயத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூட, “மக்கள் எல்லோரும் பாராட்டுறது சந்தோஷமாக இருந்தாலும். நான் என் கடமையைத்தான் செய்திருக்கேன். வேறு எந்தக் காவல் துறை அதிகாரி இந்த இடத்தில் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாங்க.” என்றார்.

கொரோனா களத்தில் ஆய்வாளர்:
மார்ச் மாதம் கொரோனா தொற்றின் விழிப்புணர்வினை காவல்துறையும் பல இடங்களில் செய்து வந்த சூழலில் இவர் பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு துண்டு பிரசுரம் வழங்கியும், கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கியும் தன் கடமையைச் சமூகப் பொறுப்போடு செய்துவந்தார். இவரது பங்களிப்பில் உருவான விழிப்புணர்வு பாடலை ஆட்டோ மூலம் வீதியெங்கும் ஒலிக்க வைத்தனர் காவல்துறையினர். காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டி வந்தனர்.

உடலை அடக்கம் செய்ய, உதவிக்கரம்:
சென்னை ஓட்டேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்மணி பிரபாவதி. இவரும், அவரது இரண்டு சகோதரிகளும், அதே பகுதியில் உள்ள நடைபாதையில், நீண்ட நாட்களாக வசித்து வந்தனர். இவர்களுக்கு, அந்தபகுதியில் உள்ளோர் உணவளித்து வந்தனர். பிரபாவதி, சில நாட்களாக உணவருந்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் இறந்து, இரண்டு நாட்களுக்கு மேலானதால், உடல் அழுகியது. அவரது உடலை அடக்கம் செய்ய இயலாமல், அவரது சகோதரியர் தவித்தனர்.இது குறித்து தகவலறிந்த, தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, நேற்று பெண்ணின் உடலை மீட்டு, இறுதி சடங்கு செய்தார்.

உடல் அழுகியும், அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயல், பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்று உள்ளது.

-மக்கள் ஊடக மைய செய்திக் குழு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here