பாப்பட்டான் குழல் – ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா

0
172

பாப்பட்டான் குழல் – ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா

சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்களைப் பதிவேற்றும் போது நம் வட்டாரம் தொடர்பான பழமை மாறாத ஒன்றைன்பதிவிட்டு மகிழ்வதில் பெருமையும் உண்டு. அத்தகைய பதிவை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார் ‘கவின் கிரியேஷன்ஸ்’ கவின் அவர்கள்!

ஆனைமலை வட்டார வழக்கம்:

இந்தியாவிலேயே — ஏன் கவுண்டமணி மொழியில் கூறுவதென்றால் உலகிலேயே — பாப்பட்டான் குழல் பாவிக்கும் ஒரே வட்டாரம் பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரம் தான்.அதுவும் ஆடிப்பெருக்கு காலத்தில் மட்டுமே!

பாப்பட்டாங்காய் என்னும் பெயருடைய சிறு காய் ஆடிப்பெருக்கு காலத்தில் ஆனைமலை ஒட்டிய மேற்குத்.தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காணப்படும்.

அச்சிறுகாய் நுழையும் வகையில் அளவான மரத்துண்டில் துளையிடுவர்.அத்துளையுடன் பொருந்தும் வகையில் கைப்பிடியுடன் கூடியதாக சிறு குச்சியினைத் தயார் செய்வர்.துளையிட்ட மரத்தண்டில் கூம்பு வடிவில் அட்டையை இணைப்பர். வண்ணத்தாள்களால் அலங்கரிப்பர்.இப்பொழுது பாப்பட்டான் குழல் தயார்.

ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து,மரத்தண்டுத் துளையில் பொருத்தி கைப்பிடிக் குச்சியால் வேகமாக அழுத்தினால் அச்சிறுகாய், உடைந்து சிதறும். அப்போது சிறு ஓசை கேட்கும்;கூம்பு வடிவம் அவ்வொலியைப் பெரிது படுத்தும்.அது பொட்டுப்பட்டாசு ( கொள்ளுப்பட்டாசு )வெடிப்பதைப் போன்று கேட்கும்.சிறுவர்,சிறுமியர் மிகவும் விருப்பத்துடன் விளையாடுவார்.ஆனைமலை வட்டாரத்தில் பாப்பட்டாங்குழல் இல்லாமல் ஆடிப்பெருக்கு சிறாருக்கு இல்லை.

சரி,இவ்வழக்கம் எவ்வாறு தொடங்கிற்று? வேறென்ன? எல்லாம் வேளாண்மை தொடர்புதான்.

அந்தக் காலகட்டத்தில் நிலக்கடலை, நெற்பயிர்கள் போன்றவற்றை விளைவிக்கும் வயல்கள் நிறைந்த பகுதியாக ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதி இருந்தது. அப்போது தானியங்களைக் கொத்தித் தின்ன வரும் குருவிகள் போன்ற சிறுப்புள்ளினங்களை விரட்ட கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த பாப்பட்டான் குழல். இதில் எழும் சத்தம் சிறு பட்டாசு சத்தம் போல் இருக்கும்.. இந்த சத்தம் கேட்டு பறவைகள் தானியப் பயிர்களை விட்டு பறந்துவிடும்.

முன்பு,பனை ஓலை மூலமாக மூங்கில் குழல் போன்ற வடிவத்தில் தயாரிக்கப்படும் அதில் பட்டாணி போன்ற காயை உள்ளே செலுத்தி அழுத்தினால் “டப்” என்ற சத்தம் கேட்கும்.( காயின் தன்மை,தரப்படும் அழுத்தம் ஆகிவற்றிற்கு ஏற்ப ஒலி மாறுபடும்) இதை அக்காலத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தினர்

காலப்போக்கில் ஆடிப்பெருக்கு அன்று மட்டும் விற்கப்படும் விளையாட்டுப் பொருளாக மாறியது,

இன்றும் வருடா வருடம் சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ள ஆடிப்பெருக்கு விளையாட்டுக் கருவி பாப்பட்டான் குழல் தான்.இந்த பாப்பட்டான் குழல் நாட்டிலேயே ஆனைமலை பகுதியில் மட்டும் தான் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது என்பது சிறப்பம்சமாகும்.

ஆனைமலை வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களானாலும் வாழ்ந்தவர்களானாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிப்பெருக்கு அன்று இந்த பாப்பட்டான் குழல் நினைவு நெஞ்சில் எழாமல் இராது!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here