மன்னர் மன்னன் -புரட்சியின் மைந்தன் மறைந்தார்.

0
162

புரட்சியின் மைந்தன் மறைந்தார்… இம்மண்ணைவிட்டு…!

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி அவர்கள் 06-07-2020 பிற்பகல் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92 . கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார்.
புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
தமிழ் மீது கொண்ட பற்றினால் தனது 14-வது வயதில் நண்பரும் கவிஞருமான தமிழ் ஒளியை உடன் இணைத்துக்கொண்டு `முரசு’ என்னும் கையெழுத்து இதழை வெளியிட்டார். அந்த இதழ் அரசுக்கு எதிராக இருப்பதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தியது பிரெஞ்சு அரசு. அப்போது 14 வயது என்பதால் தண்டனையில் இருந்து இவர் தப்பித்துவிட, கவிஞர் தமிழ் ஒளி தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் கோபதி என்ற இயற்பெரில்தான் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அன்றிலிருந்துதான் `மன்னர் மன்னன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித்தந்தார். தமிழக அரசின் திரு.வி.க விருது ,கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் . பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளிட்டார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் பேராசிரியர் அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார்.இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here