லண்டனிலிருந்து இந்தியா வந்த 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கடத்தப்பட்ட நடராஜர் சிலை

0
101

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து லண்டனுக்கு கடத்தப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரோலியில் உள்ள பிரதிஹாரா சிவன் சிலை 1998ம் ஆண்டு சமூக விரோதிகளால் கடத்தப்பட்டது. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை லண்டனக்கு கடத்தப்பட்ட விவரம் 2003ம் ஆண்டு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். சிலை கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ளவே, 2005ம் ஆண்டு இந்த சிலையை வைத்திருந்தவர் தாமாக முன்வந்து லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சிலையை ஒப்படைத்தார். ஆனாலும் அந்த சிலை இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் எழுந்தன.
கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையினர் இந்த சிலை 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், ராஜஸ்தானில் உள்ள கோவிலில் இருந்து திருடி கொண்டுவரப்பட்டது என்றும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகள் மட்டத்தில் சிலையை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதன் அடிப்படையில் தற்போது இந்தியாவுக்கு சிலையைக் கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சிலை, தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்த சிலை ராஜஸ்தான் கோவிலுக்கு அனுப்பப்படுமா அல்லது டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுமா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here