அன்பின் வேர்கள் தந்தையன்றோ – உலக தந்தையர் தினம்

0
58

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்பார்கள். தாயில்லாத பிள்ளைக்கு தாயுமானவனாக இருக்கிறார் தந்தை. அன்பைப் புகட்டுகிறாள் தாய் அறிவைப் புகட்டுகிறார் தந்தை என்பது போல் அவருடைய பாசம் அளவில்லாதது. இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தான் பார்க்காத உலகத்தையும் தன் பிள்ளைப் பார்க்க வேண்டும் என்று தன் பிள்ளையைத் தோளில் சுமக்கிறார் தந்தை. பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் அவரவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தந்தைக்கு தனக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்று ஒருநாளும் தோன்றியதில்லை. பெண் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் முதல் ஆண் தந்தை தான். அவருடைய வழிகாட்டுதலால் பிள்ளைகள் நல்வழியில் செல்கின்றனர்.

தந்தை மகன் உறவில் சிறுசிறு சண்டைகள் இருந்தாலும் தன் பிள்ளையை எங்கும் விட்டுக்கொடுக்க மாட்டார். என் தந்தைக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் ஒரு மகன் தான் சிலகாலத்தில் என் தந்தையைப் போல இவ்வுலகில் எவரும் இல்லை என்று பெருமிதத்தோடு கூறுவான். தன் பாசத்தை எல்லாம் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு கண்டிப்பை மட்டுமே காட்டுவார். தான் படும் கஷ்டத்தை தன் பிள்ளையும் படக்கூடாது என்று படாதபாடு படுவார்.

வளர வளர வாழ்க்கைப் பாடத்தை நமக்கு உணர்த்துபவர் தந்தை மட்டுமே. பெண்பிள்ளைகளுக்கு அரணாக நிற்பவரும் அவரே. அன்பிற்கும் அரவணைப்பிற்கும் அவருக்கு நிகர் அவரே. தோல்வியைக் கண்டு துவண்டு போகும் வேளையில் நமக்குத் தன்னம்பிக்கையை வளர்ப்பவரும் அவரே. பிள்ளைகளின் நிழலாக நிற்பார்.

தன் பிள்ளைக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று வாங்கி வருபவர் தமக்குப் பிடித்ததையெல்லாம் வெளியே சொல்ல மாட்டார். தந்தையாக இருப்பது கடினம். தந்தையைப் போற்றுங்கள். அவருக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள். அவரிடம் பேசினால் நிச்சயம் அவர் தான் உங்களின் சிறந்த நண்பர். இரவுபகல் பாராது தன் குடும்பத்திற்காகப் பாடுபடும் அனைத்து தந்தைக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

வயிற்றில் சுமப்பவள் தாய் நெஞ்சில் சுமப்பவர் தந்தை தந்தையின் அன்பில் நனையுங்கள்.

-எழுத்தாளர் உமா

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here