பூமியைப் போன்று மற்றொரு கோள் கண்டுபிடிப்பு

0
163

சூரியக் குடும்பத்திற்கு அப்பால், பூமியைப் மற்றொரு  கோளின்  வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கோளில், உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நீர், திரவ வடிவில் இருப்பது, விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய கோள் கண்டுபிடிப்பு:

சூரிய குடும்பத்திற்கு வெளியே இதுவரை 4 ஆயிரத்து 109 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும், அவை அடிப்படையில் வாயு உருண்டைகளாக உள்ளன.

பல கோள்களில் பாறைகளுடன் கூடிய நிலத்தரை இருந்தாலும், அவற்றில் வளிமண்டலம் இல்லை. இந்த இரு அம்சங்களுடன் புவியைப் போன்ற கோள்கள் கண்டறியப்பட்டாலும், அவற்றிலும் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்ததில்லை. மிகக் கடுங்குளிர் அல்லது மிகக் கடுமையான வெப்பம் என்ற இந்த இரு சூழ்நிலைகளிலும் கோள்களில் திரவ வடிவில் நீர் இருக்க முடியாது.

எப்படி இருக்கும் அந்த கோள்:

பூமியைப் போல 8 மடங்கு நிறையும், இரு மடங்கு பெரியதுமான K2-18b என்ற கோள் விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது சூரிய மண்டலத்தில் இருந்து 110 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, நட்சத்திரத்தை K2-18b சுற்றி வருகிறது.  இந்த K2-18b கோள், பூமியோடு ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது. மிக முக்கியமாக, பூமியைப் போலவே, அதன் நட்சத்திரத்திலிருந்து மிக அதிக தொலைவிலோ அல்லது மிகக் குறைந்த தொலைவிலோ இல்லாமல், திரவ வடிவில் நீரை தக்க வைத்துக் கொள்வதற்கான தொலைவில், K2-18b சுற்றி வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திரவ வடிவில் நீர் இருந்தால் மட்டுமே, வளிமண்டலத்தில் நீராவி கலந்திருக்கும். அந்த வகையில், உயிர் வாழ்வதற்கு சாத்தியமான, பூமியைப் போன்ற தட்பவெப்ப நிலையுடன் கூடிய ஒரு கோளின் வளிமண்டலத்தில் முதல் முறையாக நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு உயிரினங்கள் இருகின்றதா?

சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர் வாழ்க்கை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு மிகப்பொருத்தமான கோள் இதுதான் என்று, Nature Astronomy என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான Giovanna Tinetti தெரிவித்துள்ளார்.

இந்தக் கோளைஹப்பிள் வானியல் தொலைநோக்கியின் நிறமாலைமானி மூலம் ஆராய்ந்து, நீராவி இருப்பதை மிகவும் துல்லியமாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதேபோல, K2-18b கோளில் ஹைட்ரஜன், ஹீலியம் இருப்பதற்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

நைட்ரஜன், மீத்தேன் போன்றவையும் இருக்கலாம் என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. வளிமண்டலத்தில் மேகங்கள் எந்த அளவுக்கு உள்ளன மற்றும் நீரின் அளவு போன்ற விவரங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட உள்ளது.

உயிர் வாழ்க்கை என்பது நீரை அடிப்படையாக் கொண்டது என்பதால், பிராணவாயு எனக் குறிப்பிடப்படும் ஆக்சிஜனை கொண்டிருக்கும் நீரை அடிப்படையாக வைத்தே, வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை தேட முடியும் என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here