சங்க இலக்கியத்தில் யானை (பகுதி – 10)

0
233

அமெரிக்கா வாழ் வாசகர்களுக்கு வணக்கம்!

வெற்றிகரமாக பத்தாவது பகுதியில் என் எழுத்துக்கள். காரணம் வாசகர்களான நீங்கள் தான். ஒரு இளம் எழுத்தாளனுக்கு இடம் கொடுத்து அந்த எழுத்தை கொண்டாடி தீர்க்கும் அழகியலை தமிழ் என்ற ஒற்றை மொழி தான் கொடுக்கும். காரணம் அவள் தாய்க்கு கடைகுட்டியும் சரி மூத்ததும் சரி எல்லாம் சரி பாதியே. அது என் விடயத்தில் சரிவர பொருந்தி இருக்கிறது. கரம் குவித்த நன்றிகளோடு தும்பிக்கை தூக்க நகர்வோம்.

ஒன்பதாவதுப் பகுதியில் போஷ்வானியாவில் தந்ததிற்காகக் கொல்லபட்ட யானையை பற்றி விளாவரியாக பார்த்தோம். சோகம் என்னவென்றால் படித்து முடித்தக் கையோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்ச்சியில் அகம் மகிழ்ந்தது. ஆனை முகத்தோன் இறப்பதை பேசாத நாம் களிமண்ணில் அவனை வடித்து விழுந்து விழுந்து கும்பிடுவது வேடிக்கை தான். நான் நாத்திகம் பேசவில்லை. யானை பிடிக்கும் என்பதால் என் ஆதங்கத்தைப் பேசுகிறேன்.

“வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்….”

இந்த சங்க இலக்கிய பாடல் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவை பிராட்டி பாடியது. வேழ முகமும் என்று பாடலை தொடங்கி தமிழ் பாட்டி யானையின் தான் கடவுள் கண் திறந்து பாரடா என்று அன்றே பாடிய கதை இது.

பிள்ளையாருக்கு இருக்கும் மற்ற பெயர்களும் அதன் பெயர் காரணங்களையும் காண்போம். சங்க இலக்கிய வழியில்

ஆனைமுகன் –ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றஅழைக்கப்படுகின்றார்.

கஜமுகன் – கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவர் என்பதால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

ஆகையாலே விநாயகன் என்றால் யானை என்று தான் சங்க இலக்கியம் கூட அழகாய் சொல்லி உள்ளது.
ஏனோ நம் மனம் தான் இருப்பதை விடுத்து விடுத்து பறப்பதற்கே ஆசைப் படுகிறது..

தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார்.

இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககாலத் தமிழ் இலக்கியம், அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தான் வந்து சேர்ந்து இருக்கிறார் ஆனை முகத்தன் கடவுளாக!

பிள்ளையாரின் உருவ விளக்கம்

உடைந்த தந்தம்.

மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

பெருவயிறு
ஆகாயம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

யானை ஒரு நாளைக்கு 300கிலோ வரை உணவும் 150 லிட்டர் வரை தண்ணீரை குடிக்கக் கூடிய நிலத்தின் மிகப்பெரிய உயிரி.

ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. எனவே, இவா் ருத்ரா் ஆகிறார். மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே இவரே சா்வசக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.

ஐந்து கரத்தில் ஒன்றில் தந்தம், ஒன்றில் அங்குசம், ஒன்றில் மோதகம் என்னும் தின்பண்டம் மற்றொன்று இயல்பாகவே தும்பிக்கை. மொத்தத்தில் முன்னோர் புரிய வைக்க முயற்சித்தது யானை தான் இவ்வுலகின் முழுமுதற் கடவுள்.

தாழ்செவி

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

ஆனைமுகம்

அனைவரும் அறிந்ததே..

இப்படியாக யானை விநாயகர் ஆகி கடவுளும் ஆகிவிட்டது கோவில் உள் இருப்பவனுக்கு கிடைக்கும் மரியாதை கூட கோவிலின் வெளியில் இருக்கும் உண்மைக்கு கிடைக்கவில்லை என்பது விசித்திரம்.

கரையக் காத்துக்கிடக்கும் கடவுள் (விநாயகர் சதூர்த்தி மூன்றாம் நாள்)

நீ யானை முகத்தோன் என்பதற்காக காதல் இல்லை உன் மீது.. உலக அளவில் யானையின் கணக்கு உன் சிலைகளின் எண்ணிக்கையிலும் மிகச் சொற்பமே..

களிமண் குழைத்துச் சிலை வடித்தான்..
ஏரி குளங்களின் அணையாய் இருப்பாய் என்று..
இன்று ஏனோ வங்காள விரிகுடா மூச்சடைத்து மூர்க்கமாய் நிற்கிறது..

கடவுளாய் நீ கூறும் கருத்தை
உறைக்காத மண்டைக்கு எப்படி புரிய வைப்பேன்..
ஒரே இடத்தில் உண்டு அமர்ந்தால் இறைக்கும் தொப்பை வரும்..

முகமூடி அணிந்த உலகின் முதற்முதல் கதாநாயகன் நீ..

நீ இருப்பதாய் நினைவில்லை இருந்தும் அழகுதான்.. காரணம்

திருவிழாக் கோலம்.. குழந்தைச் சிரிப்பு.. அறுசுவை உணவு.. களி மண்ணை உயிர்பிக்கும் ஆக்ஸிஜன் காற்று..
இங்கு தான் கல் கடவுள் ஆகிறது…

இது சங்க இலக்கியம் அல்ல அடியேனின் இன்றைய இலக்கியம். காரணம்

இந்திய திருநாட்டின் மக்கள் தொகை 130 கோடி தெருவுக்கு 4 விநாயகரேனும் சிலையாய் இருக்கிறார்.. ஒவ்வொரு இந்து வீட்டிலும் குறைந்தபட்சம் 4 விநாயகர் சிலையோ அல்லது படமோ இருக்கும். இது இந்திய கணக்கு. கணக்கெடுப்பில் இந்திய மக்கள் தொகையையே இந்த தொந்தி கணபதி தின்று தீர்த்து விடுவார். ஆனால் அந்தோ பாவம் உயிரோடு இருக்கும் ஆனைமுகத்தோனோ வெறும் 27000 மட்டும் தான் இந்தியத்தில் இது இப்படி இருக்க தமிழகத்தின் நிலை இரண்டு ஆயிரத்திற்கும் கீழ்.

நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டியவர்கள் தான்..

ஆம் ஆனைமுகத்தோன் உயிரோடு தான் இருக்கிறார். பாதுகாக்கவும் கொண்டாடவும் தான் ஆள் இல்லை (பதிவு சிந்திக்க)

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த கட்டுரை இல்லை. இந்த விநாயகர் சதுர்த்தி யானைகளுக்காக இருக்கட்டும் என்ற ஏக்கம் மட்டும் தான்.

“விநாயகர் நாம் விரும்பும் சகலத்தையும் அருள்வாரெனில் யானைகளின் மேன்மையை விரும்புங்கள்.. அவைகளின் இனம் பெறுகி வளமுடன் இருக்க வேண்டுங்கள். இனி என்றும் விநாயகனை வழிபடும் போதெல்லாம் யானைகளை காக்க உறுதி கொள்ளுங்கள்”

– ரா.ஜெகதீஷ் ரவி யானை காதலன் (மக்கள் ஊடக மையம்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here