பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா சர்வதேச மாநாடு கூட்ட வேண்டும் என்று ஐ.நா.விடம் வலியுறுத்தியுள்ளது:

0
252

உலகின் பல்வேறு நாடுகளிலும், மதத்தின் அடிப்படையிலான பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருவதால், “பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை’ நடத்த வேண்டும் என்று ஐ.நா.விடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினமான கடந்த மாதம் 21-ஆம் தேதி, 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தத் தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நியூயார்க்கில் ஐ.நா.

சபை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் கூறியதாவது:

மக்களின் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று விப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அமைதியையும், மக்களிடையேயான ஒற்றுமையையும், மக்களின் நம்பிக்கைகளையும் குலைக்க முயன்று வருகின்றனர். மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக அவர்கள் கொண்டுள்ளனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவிலான சட்ட நடைமுறைகளை நாம் வகுக்க வேண்டும். அதுவே இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் மிகச் சரியான அஞ்சலியாக இருக்கும். இதற்காக பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் “பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை’ நாம் உடனடியாக நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதர் அம்ரித் ரோஹன் பெரேரா கூறுகையில், “பயங்கரவாதத்துக்காக மக்களின் ரத்தம் அதிகளவில் சிந்தப்பட்டுவிட்டது.

இனியும் பயங்கரவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு நாம் இருக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை’ நடத்துவதற்கான வரைவு அறிக்கையைக் கடந்த 1986-ஆம் ஆண்டு ஐ.நா.வில் இந்தியா தாக்கல் செய்தது. ஆனால், “பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான பொருள், அனைத்து நாடுகளிலும் ஒரேவிதமாகக் காணப்படாததால், இந்த மாநாட்டை நடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here