தமிழகத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்

0
187

பாரம்பரிய பண்டிகையாம் ஓணம் பண்டிகையை உலகம் முழுவதும் மலையாள மக்கள்  இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவுபெறுகிறது.

ஓணம் பண்டிகை கோலாகலம்:

தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். பலவகை ருசியான உணவுகள் சமைத்து உண்டு இந்த நாளை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.

தும்பி துள்ளல், புலி விளையாட்டு, ஊஞ்சலாட்டம் போன்றவைகளால் கிராமங்கள் களைகட்டும்.  பாரம்பரிய படகுப் போட்டிகள், களறி போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறுகின்றன. ஓணம் திருவிழாவை ஒட்டி கேரள நகரங்களில் யானைகளின் பவனி கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. யானைகளை அலங்கரித்தும் பட்டாடை ஆபரணங்கள்அணிவித்தும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

பருவ மழைக்காலம் முடிந்து கேரளத்தில் எங்கும் பசுமை பூத்திருக்கும் காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்குகிறது.

சென்னையில் ஓணம் பண்டிகை:

ஓணம் பண்டிகை சென்னையின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஓணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கோவையில் ஓணம் பண்டிகை:

கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. ஓணம் பண்டிகை நாளான இன்று கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடுகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூ கனி படையலிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.ஓணம் சத்யா எனப்படும் அன்னதானமும் கோவிலில் வழங்கப்பட உள்ளது.

கன்னியாகுமரியில் ஓணம் பண்டிகை:

கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை 10 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மகாபலி மன்னை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலமிட்டும் ஓணப்பாட்டு பாடியும் ஓண ஊஞ்சல் ஆடியும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குழித்துறையில் ஓண கலாச்சார ஊர்வலம் நடை பெற்றது. கேரள கலாச்சார உடை அணிந்த பெண்கள் முத்துக்குடை ஏந்தி வந்தனர். மகாபலி மன்னன் வேடம் அணிந்தவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிங்காரி மேளம், தையம், கோலாட்டம், பொம்மைக் கலைஞர்கள் நடனக் கலைஞர்கள் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here