அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி

0
257

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, முதல் முறையாக அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.  பொருளாதார சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அகற்றும்  வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்சதவீதம் அளவுக்கே வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது குறித்து அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிலை:

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், மத்திய வங்கியின் செயல்பாடுகளில்  அரசியல் தலையீடு இருப்பதில்லை. ஆனால் முந்தைய அதிபர்கள் பின்பற்றிய நடைமுறைக்கு மாறாக, வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என பல மாதங்களாக அதிபர் டிரம்ப் மத்திய வங்கிக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்குவிப்பற்கு தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்க மறுப்பதாக, டிரம்ப் விமர்சித்து வந்தார். இந்நிலையில், கால் சதவீதம் அளவுக்கு வங்கி வட்டி விகித குறைப்பை, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் அறிவித்துள்ளார்.

தற்போது வட்டி விகிதம் 2 சதவீதத்திலிருந்து 2.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடமானக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட கடன் வட்டி விகிதங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொருளாதார சரிவுக்கு டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப் போர்:

அதிபர் டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப் போரால் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை, சீனா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, அமெரிக்க பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பின்னடைவு ஏற்படும் நிலையில், குறைந்த வட்டி விகிதம் என்ற கவசத்துடன் அதை எதிர்கொள்ளும் வகையில் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை:

பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் எனவும் அமெரிக்க வங்கி கருதுகிறது. இருப்பினும் இந்த முடிவுக்கு செலாவணிக் கொள்கை குழுவில் 8 பேர் ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் வாக்களித்திருப்பதால், விரிவான விவாதத்திற்குப் பிறகே வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த வட்டி விகிதம் வெறும் கால் சதவீதம் அளவுக்கே குறைக்கப்பட்டிருப்பது குறித்து அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தவறான நடவடிக்கை என்றும், சிறிய அளவிலான வட்டி விகித குறைப்பு போதுமானது அல்ல என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல பாவெல் ஏமாறத்தையே அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வட்டி விகித குறைப்பு என்பது ஒருவகையில் வெற்றி என்றாலும், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெரிய உதவி எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதையே இது காட்டுவதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஆனால், வட்டி விகித குறைப்புக்கு டிரம்பின் அழுத்தம் ஒரு காரணி அல்ல என ரிசர்வ் வங்கி தலைவர் பாவெல் கூறியுள்ளார். செலாவணிக் கொள்கை முடிவை சுதந்திரமாகவே எடுக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை தொடர வாய்ப்பில்லை என ஜெரோம் பாவெல் சூசகமாகக் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தொடரும் என பங்குச்சந்தைகளில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்ற ரிசர்வ் வங்கியின் சூசக தகவலால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here