அமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு

0
246

நவகிரகங்களில் மிகமுக்கியமானவர் சனீஸ்வர பகவான். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் – சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக ,  மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.

இந்தியவில் சனீஸ்வரர் கோவில்:

இந்தியாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்  காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர வழிபாட்டுக்கு புகழ்பெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் லோக நாயக சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.

சனீஸ்வர கோவில் நிகழ்வு:

சனீஸ்வரர் கோவில் இந்தியாவில் பல இடங்களில் இருந்தாலும் அவரை வழிபடுவதற்காகவும், அல்லது அங்கு கோவில் உருவாக நேர்ந்த நிகழ்வினையும் சிறப்பாக கூற முடியும்.  அத்தகைய நிகழ்வுகளில்

சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும்  நிகழ்ச்சி உண்டு:

“வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆட்சிசெய்து வந்தார் தினகரன் என்ற மன்னர்.  நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாததுதான்  அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி  ஒன்று கேட்டது. அதில் ‘உன் வீட்டுக்கு ஒரு  சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்’ என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்னபடி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு அரசர் தினகரனின் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகான ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் சுதாகன். சுதாகனும் அவருடைய அண்ணனான சந்திரவதனனும் வளர்ந்து வந்த நிலையில் சுதாகனைக் காட்டிலும் வளர்ப்பு மகனான சந்திரவதனன் திறமையாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கினான். அதை அறிந்த தந்தை தினகரன் வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்.

சில தினங்களில் தந்தை தினகரனுக்கு விதிப்படி 7 ½ சனி பிடித்து உடல்நிலை மோசமானது. இந்நிலையைக் கண்ட வளர்ப்பு மகன் சந்திரவதனன் ஜோதிடரிடம் சென்று பரிகாரம் கேட்டான். அதற்கு ஜோதிடர், ‘சனிபகவானை தரிசித்து வா, உன் தந்தையின் நோய் குணமாகும்’ என்று கூறினார். உடனே சந்திரவதனன் தென்னாட்டில் அழகிய பகுதியான மதுரையம்பதிக்கு அருகில் சுரபி நதிக் கரைக்குச் சென்று சனி பகவானின் உருவத்தைக் கற்பனை செய்து, இரும்பால் சனீஸ்வரனின் உருவத்தைச் செய்தான். உருவாக்கிய சனி பகவானைப் பார்த்து ‘கடவுளே என் தந்தையின் அனைத்து துயரங்களையும் போக்கி அத்துன்பங்கள் யாவற்றையும் எனக்கு கொடுங்கள்… அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று வணங்கினான். அவன் குரலில் நெகிழ்ந்த சனி பகவான் அவன் முன் காட்சியளித்தார். ‘நான் உன் தந்தைக்கு கொடுத்த துயரங்கள் யாவும் அவர் முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக மட்டுமே.  இப்போது  உன் வேண்டுதலை ஏற்று, தந்தையின் துன்பங்கள் யாவற்றையும் போக்கி அந்தத் துன்பங்களை உனக்குத் தருகிறேன். உன் நல்ல மனதை எண்ணி நீ வெறும் 7 ½ நாழிகை மட்டுமே துன்பத்தை ஏற்றால் போதும். இதுகூட நீ முற்பிறவியில் செய்த பாவத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான்’ என சனிபகவான் கூறினார். அதன்படியே சந்திரவதனன் சனி பகவானின் அருளைப்பெற்று  வாழ்வாங்கு வாழ்ந்தான்.”

மேற்காணும் நிகழ்வில் சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் தோற்றுவித்த சனி பகவான் திருவுருவமே தேனிமாவட்டத்தில் குச்சனூர் ஆலய மூலவராக மாறியது. அது இன்றும் வணங்கப்பட்டு வருகிறது.

இங்கு அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த சனீஸ்வரர் கோவிலுக்கு மூலகாரணம் வட அமெரிக்காவில் ஸ்ரீ நவகிரக தேனஸ்தானத்தின் லாப நோக்கமற்ற அமைப்புதான்.

இந்த கோவில்.  கோவிலுக்காக நன்கொடை வழங்கவும் நவக்கிரக கோவில்களை கட்டிக்கொண்டு வரும் இந்த குழுவிற்கு உதவ விரும்புவோரும் இணையதளத்தில் விபரங்களைக் காணலாம்.

இந்த கோவிலில் ஒவ்வொருநாளும் நடக்கு பூஜை குறித்தும் அறிவித்துள்ளனர். சனீஸ்வரருக்கு நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு அதிகளவிலான தமிழர்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆலய முகவரி : 

SHRI SANEESWARA TEMPLE,SHRI NAVAGRAHA DEVASTHANAM OF NORTH AMERICA INC,1616 HILLSIDE AVENUE TEMPLE SUITS, NEW HYDE PARK,NEWYORK – 11040

Phone: 718 740 9400 / 516 358 9400Email: Temple.Navagraha@Gmail.ComWebsite : http://www.navagrahausa.com

– உமாமகேஸ்வரி (மக்கள் ஊடக மையம்)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here