ஸ்ரீலங்காவில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்: ஸ்ரீ லங்கா அரசு நடவடிக்கை:

0
228

ஸ்ரீலங்காவில் நேற்றிரவு முதல், ட்விட்டர் தவிர்த்த ஏனைய சமூக வலைதளங்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென முடக்கப்பட்டுள்ளன.

நீர்க்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியாகியிருந்ததால் இந்தத் தடை விதிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

9 நாட்களுக்குப் பின்னர் சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

ஸ்ரீலங்காவில் சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் ஈஸ்டர் (ஏப்.21) தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 257 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை (மே 06) திரும்பப்பெறப்பட்டது.

இந்நிலையில், தேவாலய குண்டுவெடிப்பு நடந்த நேகம்போ எனுமிடத்தில் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை திடீரென வன்முறை ஏற்பட்டது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது.

 

 

நீர் கொழும்பில் என்ன நடந்தது?

நீர்கொழும்பு – போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த மோதலால் வாகனங்கள்,  சொத்துகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

அப்பகுதியில் போலீஸ் விசேட அதிரடி பிரிவினர் குவிக்கப்பட்டு, தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போருதொட்டைக்கான அனைத்துப் பாதைகளும் வன்முறையாளர்களால் சூழப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நீர்கொழும்பில் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை த்தோற்றுவிக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு எதிராக ,கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கண்டியில் இதேபோன்று சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here