தமிழக முதலமைச்சர் லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

0
162

இங்கிலாந்தில் புதுப்பிக்க வல்ல மின்சக்தி ஆலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது அவர், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகளை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து அதிகளவில் முதலீடுகளை ஈர்த்திடவும் இங்கிலாந்தில் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் முதற்கட்டமாக இங்கிலாந்து நாட்டில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாடு, லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், அங்குள்ள புகழ் பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சுகாதாரத்துறை சார்பில் மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இங்கலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை:

இதன் பின்னர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற வளாக கூட்டரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்தில், சபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் மற்றும் ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் அந்த ஆலை அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

புதுப்பிக்கவல்ல எரியாற்றல் திட்டம்:

இங்கிலாந்தில், வருகிற 2050-ஆம் ஆண்டிற்குள் நிலக்கரியை எரித்து மின்சாரம் தாயாரிக்கும் முறையை அறவே ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதற்குள் முழுவதும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பயன்பாட்டை விரிவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் எம்.சாய்குமார்,செந்தில்குமார் மற்றும் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here