செம்மொழியை காக்க தமிழக அரசின் புதிய முயற்சி ”சொற்குவை” வலைதளம்

0
138

இந்தியாவில் உள்ள மொழிகளில் முதன் முதலில் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட செந்தமிழ் மொழியை காப்பதற்கு தமிழக அரசின் சார்ப்பில் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சி என்னவென்றால், நாம் பேசும் போதும், எழுதும் போதும் பிறமொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும், கலைச்சொற்களை தமிழ் சொற்களை பயன்படுத்தவும் சொற்குவை என்னும் வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

செம்மொழி – Classical language:

செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும்.இந்தியாவில் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட மொழி நம் தமிழ் மொழி.

கல் தோன்ற மந்தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மொழி, செம்மொழி நம் தமிழ் மொழி. தமிழற்கே உள்ள பெருமையாகும்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால்  தமிழ் மொழி செம்மொழி என்ற இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் புதிய முயற்சி:

அனைத்து மொழிகளிலும், சொற்களே மொழிக்கு அடிப்படை.  அதன் அடிப்படையில் தமிழ் சொற்களைப் பாதுகாத்தால்தான், தமிழ்மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முடியும். சொற்கள் பெருகப் பெருக மொழியும் வளர்ந்து உயர்வு பெறும் என்ற அடிப்படையில்,  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில்,சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு http://sorkuvai.com எனும் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிறமொழி சொற்களை நீக்கி தமிழ் சொற்களைப் பயன்படுத்தவும், பிறமொழியில் உள்ள கலைச் சொற்களை தமிழ் மொழியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

சொற்குவை” வலைதளம் (sorkuvai.com):

  • சொற்குவை என்ற வலைதளம் மூலம், ஆங்கிலத்தில் உள்ள ஒரு அரிய சொல்லுக்கு தமிழில் என்ன பொருள், இலக்கியத்தில் என்ன பொருள் உள்ளது.மேலும் இந்த சொல் எப்படி உருவாகி உள்ளது போன்ற சந்தேகத்தையும் கேட்டு தெளிவு பெற,14469 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டத்தின் மூலம் தற்போது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள்,அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மொழி சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • உதாரணமாக, செல்பி என்பதற்கு தாமி என்றும், whatsapp என்பதற்கு கட்செவி என்றும், அதே போல பென்டிரைவ் என்பதற்கு பதிவுக் கோல் என இதுபோன்று பல தமிழ் சொற்களை உருவாக்கி உள்ளனர்.

இதற்காக மொழி சார்ந்த அறிஞர்களைக் கொண்டு தனித்தனியாக குழுக்கள் அமைத்து கலைச் சொற்களை உருவாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மருத்துவம், பொறியியல், ஊடகம் என துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு அந்தந்த துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகளும் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் இளைஞர்கள் தமிழ் ஆர்வலர்கள், பிறமொழி வார்த்தைகளுக்கு சரியான சொற்களை கொடுத்தால் தங்களின் குழு அந்த சொற்களை பரிசீலனை செய்து அவற்றையும் இந்த அகராதியில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் அகரமுதலியின் இயக்குனர் காமராசு.

திட்டத்தின் பயன்கள்:

  • இந்த சொற்கோவை திட்டம் கலைச்சொற்களை தமிழ் படுத்தி படிக்க பயனுள்ளதாய் இருப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
  • இத்திட்டத்தின் மூலமாக இதுவரை 600-க்கும் மேற்பட்ட துறைகளில் 4 லட்சத்து 2 ஆயிரம் சொற்களை பதிவு செய்துள்ளனர். இன்னும் பல சொற்களை பதிவேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • இச்சொற்குவைத் திட்டத்தை உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களும், மொழியியல் ஆய்வாளர்களும் பயன்படுத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகளின் அமைப்பு (யுனெஸ்கோ) வெளியிட்டுள்ள மொழிவரிசைப் பட்டியலில் 14-ஆம் இடத்திலுள்ள தமிழ்மொழி 10-ஆம் இடத்திற்கு முன்னேற்றம் காண்பதற்கான வழிவகை அமையும் என்று கருதப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here