சீனாப் பொருட்கள் மீது மீண்டும் 10 சதவீத வரி உயர்வு டிரம்ப் உத்தரவு

0
60

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாடு:

ஜி20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், ஜின்பிங்கும் ஒசாகாவில் சந்தித்துப் பேசினர். வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதோடு, சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை, எனவும் முடிவுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க குழு ஷாங்காய் சென்று பேச்சு நடத்தியது.

அமெரிக்க நிதியமைச்சர் Steven Mnuchin, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Robert Lighthizer உள்ளிட்டோர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து, சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விளக்கியுள்ளனர். அப்போது சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது என்றாலும், அது உடனடியாக சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் உறுதியளித்தபடி, அமெரிக்க வேளாண் விளைபொருட்களை வாங்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எதையும் சீனா மேற்கொள்ளவில்லை என்று டிரம்பிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் இருப்பது, 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் சீனா பின்வாங்கியது, உறுதியளித்தபடி வேளாண் விளைபொருட்களை சீனா வாங்காதது என இதற்கான காரணங்களை டிரம்ப் பட்டியலிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்காவில், போதைப்பொருள் வடிவில் பயன்படுத்த மடைமாற்றப்படும் Fentanyl விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்படும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியதாகவும், அதையும் செய்யாததால், அமெரிக்கர்கள் உயிரிழப்பது தொடர்வதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

மீண்டும் 10 சதவீத வரி உயர்வு:

சீனாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், இருப்பினும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது சிறிய அளவாக 10 சதவீத வரி விதிக்கப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடன் முழுமையான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்காக நேர்மறையான பேச்சுவார்த்தை தொடரும் என்றும், இரு நாடுகளுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீன அதிபர் ஜின்பிங் விரைவாக வர்த்தக ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், ஏற்கெனவே 10 சதவீதத்தில் இருக்கும் வரி விதிப்புகள் 25 சதவீதமாகவும் அதற்கு மேலும் உயர்த்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தீவிரமடையும் வர்த்தகப் போர்:

டிரம்பின் இந்த அறிவிப்பினால் அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலும், ஆசியாவிலும் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன இதுகுறித்து டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து தாம் கவலைப்படவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.

இதனிடையே, டிரம்பின் புதிய அறிவிப்பால், அனைத்து சீனப் பொருட்களும் வரி விதிப்பிற்குள் வந்துள்ள அதேசமயம், அமெரிக்காவில் அந்த பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிரம்பின் நடவடிக்கையினால் பாதிப்பு அடையும் அமெரிக்க மக்கள்:

சீன இறக்குமதிகள் மீதான புதிய வரி விதிப்பு நுகர்வோர் தலையிலேயே சுமத்தப்படும் என்பதால், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஷூக்கள், பொம்மைகள் போன்றவற்றின் விலை உயரும்.

அமெரிக்காவில் விற்பனையாகும் பொம்மைகளில் 85 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்படுபவை. விடுமுறைக்காலத்தை முன்னிட்டு ஏற்கெனவே பல நிறுவனங்கள் பொம்மைகளுக்கு சீனாவில் ஆர்டர் கொடுத்திருப்பதால், அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்போது அவற்றின் விலை உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விற்பனை சரிந்தால் பொம்மை விற்பனை தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

விடுமுறைக்காலம் முடிந்து பள்ளிகள் திறக்கும் காலகட்டத்தில், அதற்கு தேவையான பொருட்கள் வாங்கும்போது புதிய வரி விதிப்பால் அவற்றின் விலைகளும் உயரும் என வர்த்தக சங்கங்கள் கூறியுள்ளன.

அமெரிக்காவில் வாங்கப்படும் ஆடைகளில் 42 சதவீதமும், காலணிகளில் 69 சதவீதமும் சீனாவில் தயாரிக்கப்படுபவை. எனவே புதிய வரி விதிப்பின் மூலம், தனது வர்த்தகப் போரில் அமெரிக்கர்களையே டிரம்ப் பிணைக் கைதிகளாக பயன்படுத்துகிறார் என்று காலணி விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மேட் பிரீஸ்ட் விமர்சித்துள்ளார்.

டிரம்பின் நடவடிக்கையினால் சரிவை சந்திக்கும் ஆப்பிள் நிறுவனம்:

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐஃபோன்கள் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்டு அமெரிக்கா வரும் நிலையில் அவற்றின் விலை 75 டாலர்கள் முதல் 100 டாலர்கள் வரை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் எதிரொலியாக, ஆப்பிள் நிறுவன பங்குகள் அமெரிக்காவில் 2 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

மேலும், புதிய வரி விதிப்புக்கு பதிலடி நடவடிக்கையாக, சீனாவில் தொழில் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மேலும் கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடலாம் என தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here