நாங்கெல்லாம் கவரிமான் பரம்பரை! தெரியுமா? – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும் அகநானூறு!

2
418

“நாங்கெல்லாம் கவரிமான் பரம்பரை! தெரியுமா? ஒரு முடி விழுந்தால் கூட உயிரை விட்டுடுவேன்.” இந்த கவரிமானை மானத்துடன் ஒப்பிடும் சொல்லாடல் எங்கிருந்து வந்தது தெரியுமா?

தமிழகத்தில் பாலைவனம் கிடையாது. ஒட்டகங்களும் கிடையாது. ஆனால், சங்க இலக்கியத்திற்கு முன்பே தொல்காப்பியர் ஒட்டகத்தின் குட்டியை “கன்று” என்று சொல்ல வேண்டும் என கூறுகிறார்.

“உணவுக்கே வழியில்லாத பாலையில், ஒட்டகம் எலும்பை திண்ணும்” என அகநானூறு கூறுகிறது. ஏழு எட்டு நாட்கள் உணவில்லாமல் இருக்கும் ஒட்டகம் பாலைவனத்தில் இருக்கும் “எலும்புகளை” பசியாற கொறிக்கும் என்பது ஒட்டகங்களுடன் ஒட்டி வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரிந்தது.

சங்க இலக்கிய புலவர்களின் தொன்மை:

சிங்கம் குறித்தும் கோவேறு கழுதை குறித்தும் எழுதப்பட்டுள்ளது. சிங்கம் நர்மதை நதி தாண்டி தெற்கில் வந்ததில்லை. கோவேறு கழுதை அதாவது “Wildass” குஜராத் பகுதியில் மட்டுமே உள்ளது.

2300 கி.மீ அப்பால் பனிப் பிரதேசங்களில் இருக்கும் விலங்கை குறித்தும் 2100 கி.மீ அப்பால் இருக்கும் பாலை நிலத்து விலங்குகளை குறித்தும் சங்க இலக்கிய புலவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திய நிலப்பரப்பை முழுமையாக தெரிந்த ஒரே தொன்மை இலக்கியம் சங்க இலக்கியம் மட்டுமே. வட இலக்கியங்களுக்கு புலப்படாத வடக்கும் என்ன என்று தெரியாத தெற்கும் சங்க இலக்கியம் அலசி ஆராய்ந்து எழுதி உள்ளது.

சங்க இலக்கியத்தை வெறும் பாடல்களாக இலக்கியங்களாகவும் பார்த்துவிடக்கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய பொக்கிஷங்கள் மீண்டும் மீண்டும் பனை ஓலைகளில் பிரதி எடுத்து  நம் முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

திருக்குறளில் கவரிமான்:

இமயமலைப் பகுதிகளில் 14,000 அடிக்கு மேல் வாழும் விலங்கு கவரி(யாக், Yak). இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் “மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா” என திருவள்ளுவர் எழுதி இருப்பதை “மான்” என்று தவறாக எடுத்துக் கொண்டார்கள். “மா” என்பது விலங்குகளைக் குறிக்கும் சொல். கடும்குளிர் பிரேதசங்களில் வாழும் விலங்குகளுக்கு அதன் மீதுள்ள அடர்ந்த “மயிர்” ரோமங்கள் விலங்கின் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த “மயிர்” உதிர்ந்தால் கடும்குளிரை தாளாமல் விலங்குகள் உயிரிழக்க நேரிடும்.

அதுமட்டுமல்லாமல் “வான் தோய் இமயத்து கவரி” என சங்க இலக்கியத்திலும் உள்ளது. அது, “என்ன உண்ணும், எங்கு வாழும், எந்த மரத்தடியில் உறங்கும்” என்பவை உட்பட அனைத்து விளக்கங்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன.

சங்க இலக்கியத்தின் சாப்ட்வேர்:

சங்க இலக்கியங்கள் சாப்ட்வேர் என்றால் இங்கு இருக்கும் இடங்களும் மலைகளும் காடுகளும் தொல்பொருள் ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்களும் ஹார்டுவேர். இவை இரண்டும் ஒன்று சேரும் போது வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களுக்கான திறவுகோல் கிடைக்கும். நமது தனித்தன்மையான பெருமைகள் நமக்குத் தெரியவரும்.

அகழ்வாய்வுகளை உற்றுநோக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு, கிடைக்கும் ஒரு சிறு துண்டு பொருள் கூட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறதா ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு. இல்லை என்றால், தமிழர் வரலாற்றில் நாம் துரோகிகளாக முத்திரை குத்தப்படுவோம் !

 

2 கருத்துக்கள்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here