WHO-அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
65

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது என அதிபர் தகவல்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நிறுவனத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக முதலில் எச்சரித்தார். பின்னர் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அறிவித்தார்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான கடிதத்தை ஐநா பொதுச் செயலாளரிடம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் கேட்டுக்கொண்டபோதும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவு,“அமெரிக்கர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும்“ என என வெளியுறவுக் குழுவின் உறுப்பினரும், ஜனநாயக கட்சியின் முன்னணி செனட்டருமான ராபர்ட் மெனண்டெஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன்,“நான் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும்“ எனத் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும். இந்த அமைப்பில் 193 நாடுகள் அங்கத்துவம் பெற்றிருக்கின்றன.

இந்த, உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் அளித்துள்ளது.

ஆனாலும் ஐநாவின் நடைமுறைப்படி அமெரிக்காவின் இந்த விலகல் கடிதம் வழங்கிய ஓராண்டுக்குப்பின் அதாவது 2021ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி தான் வெளியேற்றம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here